திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், உதவி ஆய்வாளர் சரவணன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, கவின் செல்வகணேஷ் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவின் செல்வ கணேஷ் உடல், அவரது தந்தை சந்திரசேகர், தம்பி ப்ரவீனிடம் 5 நாட்களுக்கு பிறகு நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சர் கே.என்.நேரு, திருநெல்வேலி ஆட்சியர் ஆர்.சுகுமார், எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ராஜா உள்ளிட்டோர் கவின் செல்வ கணேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கவின் செல்வகணேஷ் உடல் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது உடலுக்கு கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ,தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், ராஜலெட்சுமி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ஊர்வலமாக அருகேயுள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி, போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சுபாஷினிக்கு சம்மன்: இதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினிக்கு, சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.