Last Updated : 01 Aug, 2025 02:44 PM
Published : 01 Aug 2025 02:44 PM
Last Updated : 01 Aug 2025 02:44 PM

கரூர்: கரூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உயர்மின் விளக்கு கோபுரத்தில் ஏறி போராடிய நடத்துநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (58). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கரூர் கிளை 2-ல் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வழித்தடத்தில் பணியாற்றும்போது பரிசோதகர்கள் நடத்துநரின் பணப்பையை சோதித்துள்ளனர்.
அதில் ரூ.35 குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்காததாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மெமோ வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த பழனிசாமி சீருடையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு இன்று (ஆக.1-ம் தேதி) காலை 8 மணிக்கு வந்தார். அங்கிருந்த சுமார் 30 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்தின் மேலேறிவிட்டார். இதுகுறித்த தகவலறிந்து வந்த துணை மேலாளர் சுரேஷ், பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இவற்றை கேட்காத பழனிசாமி குதிப்பதுப்போல ஏறி நின்றார். இதையடுத்து பசுபதிபாளையம் போலீஸார் மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸார், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து பழனிசாமி சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்தை கைவிட்டு கீழே 9.45 மணிப்போல கீழே இறங்கினார். இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி குடும்பத்தினரை வரவழைத்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!