’ஹை ஹர வீர மல்லு’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
க்ரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. நீண்ட மாதங்களுக்குப் பிறகு வெளியாகும் பவன் கல்யாண் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதால் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார் ஏ.எம்.ரத்னம்.
ஜூலை 24-ம் தேதி வெளியான இப்படம் பெரும் தோல்வியை தழுவி இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்றெல்லாம் செய்திகள் பரவ, அவற்றை எல்லாம் நீக்கி புதிய பதிப்பையும் மாற்றியது படக்குழு. ஆனால், எதுவுமே பெரிதாக மக்களிடம் எடுபடவில்லை. முதல் நாள் மட்டுமே நல்ல வசூல் இருந்தது. தற்போது உலகளாவிய ஒட்டுமொத்த வசூலே ரூ.100 கோடியை தொடும் என்கிறார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் குறைந்தது 100 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள். இது பவன் கல்யாணின் திரையுலக வாழ்க்கையில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய படமாக இருக்கும் என்கிறது திரையுலக வட்டாரம். மேலும், இப்படத்தினை திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.