ராய்ப்பூர்: கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுவதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சர்மா, “கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்துகிறது.
இத்தகைய போராட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அன்றி வேறல்ல. ஏற்கெனவே, காங்கிரஸ் குழு ஒன்று, கன்னியாஸ்திரிகளைச் சந்திக்க அனுமதி கோரியது. நாங்கள் அனுமதி அளித்தோம். நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதுதான் காங்கிரசின் நோக்கமா?
இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்களுக்கு பிணை வழங்குவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்” என தெரிவித்தார்.
கன்னியாஸ்திரிகள் இருவரும் கடந்த ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைதைக் கண்டித்து கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தின. பாஜக தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மதச் சுதந்திரத்தை நசுக்குவதாக இரு தரப்பும் பாஜகவை குற்றம் சாட்டின. அதேநேரத்தில், கேரள பாஜகவும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கன்னியாஸ்திரிகள் இருவரும் சட்டவிரோத மத மாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர், “கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது மிகப் பெரிய அநீதி. சட்டவிரோதமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. பணிக்காகவே பழங்குடி பெண்கள் சிலரை மாநகருக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த பஜ்ரங் தல் அமைப்பினர் செய்த பிரச்சினை காரணமாகவே கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சரி அல்ல. அனைவருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கேரளாவில் உள்ள பாஜகவினர், தாங்கள் சத்தீஸ்கர் சென்று கன்னியாஸ்திரிகளை ஜாமீனில் அழைத்து வரப் போவதாகக் கூறினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.” என குற்றம் சாட்டினார்.