நாக்பூர்: நமது நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதம் எனத் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் உள்ள கவி கல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபினவ் பாரதி சர்வதேச கல்விக் கட்டிடத்தை இன்று திறந்துவைத்துப் பேசிய மோகன் பாகவத், “சமஸ்கிருதத்தை புரிந்து கொள்வதற்கும் அதில் உரையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொண்டேன். ஆனால், என்னால் சரளமாகப் பேச முடியவில்லை.
சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும். சமஸ்கிருதத்தை நாட்டின் தொடர்பு மொழியாக மாற்ற வேண்டும். இதற்கான அவசியம் இருக்கிறது. நாடு தற்சார்பு அடைய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து இருக்கிறது. அதற்காக நாம் நமது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மொழி என்பது ஓர் உணர்வு. ஸ்வத்வம் (நற்குணங்கள்) என்பது பொருள் சார்ந்தது அல்ல. தனித்துவமான அது மொழி மூலம் வெளிப்படுகிறது. சமஸ்கிருதம்தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மூலம். சமஸ்கிருதத்தை அறிந்து கொள்வது என்பது நாட்டை புரிந்து கொள்வது போன்றது. சமஸ்கிருத பல்கலைக்கழகத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதைப் போல பொதுமக்களின் ஆதரவும் அவசியம்.” என தெரிவித்தார்.