தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாகன ஓட்டிகள் குடித்திருக்கிறார்களா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், காவல் துறை கடமைக்காக ஆய்வு செய்கின்றன.
ஆனால், பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுதான் ஏற்றப்பட்டிருக்கிறதா என எளிதாக சோதிக்க முடியும். வட்டார போக்குவரத்து துறையினர், காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக செய்தால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும். ஆனால், இந்த இரு துறைகளும் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி, தங்கள் வருவாயை மட்டும் அதிகரித்து கொள்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட லாரிகள் கனிமவளத்தை கொண்டு செல்கின்றன. இதில் அதிக பாரம் ஏற்றினால், அதிக வாடகை பெறலாம் என்ற எண்ணத்தில் சில ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி பாரம் ஏற்றி செல்கின்றனர். அதனை சோதிக்க வேண்டிய அதிகாரிகள், அதை செய்யாமல் ஆபத்தான வகையில் வாகனங்களை இயக்க அனுமதித்து விடுகின்றனர்.

பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்.
அதிக எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பழுதாகி நின்று போனால் மற்ற வாகனங்கள் அதில் மோதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அதிக எடை ஏற்றிய வாகனத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. சரியாக, முறையாக செயல்படாத அதிகாரிகளை தண்டிக்கவும் சட்டம் இருக்கிறது.
போக்குவரத்துதுறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கையூட்டு பெறாமல் கண்டிப்பு மற்றும் மனசாட்சியுடன் நடந்து கொண்டு தவறு செய்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் நிச்சயம் குறையும். அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும்.
இது குறித்து சமூக ஆர்வலர் மித்ரன் கூறியது: அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் சாலையில் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. 2005-ம் ஆண்டில் சாலைகளில் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், கூடுதல் சுமை ஏற்றிச் செல்லும் போக்கு தொடர்ந்து வருகிறது.
சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களே என்பதால், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அதிக அபராதம், வாகன உரிமையாளர்களுக்கு, 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என, அரசு எச்சரித்துள்ளது. ஆனால் இந்த சட்டங்களை சரியாக செயல்படுத்துவதில்லை.
மேலும், சரக்கு வாகனங்களில் பதிவுச் சான்றின்படி அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக பாரம் ஏற்றி இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது, 1988-ம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்ட பிரிவு – 194-ன் படி, அதிக பாரம் ஏற்றியதற்கு ரூ.20,000/- அபராதமும், கூடுதலாக வாகனத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2000-/ வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தாம்பரத்திலும், செங்கல்பட்டு பகுதிகளிலும் ஏராளமான கல்குவாரிகள், கிரஷர்கள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் செல்கின்றன.
இதனை தாம்பரம், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. காரணம் அவர்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை.
ஆய்வுகள் செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு மட்டும் அபாரதம் விதிக்கப்படுகிறது. அதிக வாகனங்களை வைத்துள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளிடம் ஒவ்வோரு மாதம் மாமுல் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை.
காவல்துறை அதிகாரிகளும், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்களும் இதுபோல செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, தங்களின் வருவாயை மட்டும் அவர்கள் பெருக்கிக் கொள்கின்றனர்.
கூடுதல் பாரத்துடனும், அதிவேகமாகவும் இவ்வாகனங்கள் இயக்கப்படுவதை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முறையாக வாகன தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர், என்றார்.