சென்னை: தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில், ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி நடைபெறுகிறது. இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணி, பார்சல் அலுவலகக் கட்டிடப் பணி என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் விதமாக, நடைமேம்பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கின.
இதற்காக, ரயில் நிலையத்தின் 1, 2-வது, நடைமேடைகள் ஜூன் முதல் வாரத்தில் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, 3, 4-வது நடைமேடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக, சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், மன்னார்குடிக்கு இயக்கப்பட்ட மன்னை விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டன.
இதுதவிர, சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்பட்ட விரைவு ரயில் உள்பட சில ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. இந்த ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் இருந்து தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் 1, 2-வது நடை மேடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சில ரயில்கள் இங்கிருந்து மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் விதமாக, நடைமேம்பாலம் அமைய உள்ளது. இவற்றில் ஒரு பகுதி பார்சலுக்காகவும், மற்றொரு பகுதி பயணிகளுக்காகவும் ஒதுக்கப்பட உள்ளது.
3 நடைமேடைகள் மூடல்? – நடைமேம்பால அடித்தள பணிக்காக, 1 முதல் 4-வது நடைமேடை வரை மூடப்பட்டு, அங்கு அடித்தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் அடித்தளம் அமைக்க 2 மாதங்கள் ஆகும். அதன்படி, 1, 2-வது நடைமேடைகளில் அடித்தளம் அமைக்கும் பணி ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிந்துவிடும். தொடர்ந்து, 1, 2-வது நடைமேடைகளை எங்களிடம் ஒப்பந்த நிறுவனம் ஒப்படைப்பார்கள்.
இதன் பிறகு, 2-வது நடைமேடையில் இருந்து சென்னை – மதுரை தேஜஸ் ரயிலையும், சென்னை – புதுச்சேரி விரைவு ரயிலையும் இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கிடையில், 5 முதல் 7 -வது வரையிலான 3 நடைமேடைகளில் அடித்தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக, நடைமேடைகள் மூடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. இருப்பினும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.