சென்னை: “மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ குறை சொல்வதைப் பார்க்கும்போது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது போன்று” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் ஜெயலலிதாவுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர். இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதாவை குறை சொல்லும் விதமாக “பாஜக கூட்டணி முறிவு” என்ற வரலாற்று பிழையை அம்மா செய்துவிட்டார்கள் என்று மாண்புமிகு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி ஜெயலலிதா பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு பேச்சுதான் வரலாற்றுப் பிழை.
“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த ஜெயலலிதாவை கடம்பூர் ராஜூ குறை சொல்வதைப் பார்க்கும்போது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
ஜெயலலிதாவை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்வதைப் போன்றது. “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.