திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.
இதனால், திருவாரூர் மாவட்டத்தில் கலைவாணனும் ராஜாவும் ஆளுக்கொரு பக்கம் பலம் திரட்டினார்கள். மன்னார்குடியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வென்றிருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதிக்குள் பூண்டி கலைவாணன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். இதனால், சம்பிரதாயமான கட்சி நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதற்காகவும் பூண்டி கலைவாணன் மன்னார்குடி பக்கம் தலைகாட்டுவதில்லை.
திமுக உள்கட்சி தேர்தலிலும் இவர்களுக்கு இடையிலான அதிகார யுத்தம் ஆங்காங்கே தலைதூக்கியது. பூண்டி கலைவாணன் மாவட்டம் முழுக்க தனது செல்வாக்கை வியாபித்து வைத்திருந்தாலும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து அங்கெல்லாம் தனது ஆதரவாளர்களை பதவிக்கு கொண்டு வந்ததன் மூலம் மன்னார்குடி தொகுதிக்குள் மட்டுமல்லாது திருத்துறைப் பூண்டியிலும் தனது செல்வாக்கை படரவிட்டார் ராஜா.
இதனிடையே, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற சிஸ்டத்தை திமுக தலைமை அமல்படுத்தப் போவதாக வந்த தகவல்களை அடுத்து திருவாரூர் மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றுக்கு, தான் செயலாளராக வரவேண்டும் என பிரயாசைப்பட்டார் ராஜா. ஆனால், இதனால் தங்களுக்கான அதிகார வரம்பு குறைக்கப்படும் என்பதால் மாவட்ட பிரிவினையை கடுமையாக எதிர்த்தது கலைவாணன் தரப்பு.
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமைச்சரவை மாற்றத்தின்போது டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்கியது தலைமை. இதையடுத்து, மாவட்டப் பிரிவினை முழக்கத்தை மறந்த ராஜா, தனது இலாக்கா சம்பந்தப்பட்ட பணிகளை கவனிக்க ஆரம்பித்தார். இதையடுத்து நிம்மதியான கலைவாணன், மாவட்ட திமுக-வில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தும் வேலைகளில் கவனத்தைத் திருப்பினார். தனது செயல்பாடுகளால் கட்சித் தலைமையின் கூடுதல் அபிமானத்தையும் பெற்றார்.
அண்மையில் திருவாரூருக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியின் மதிப்பீட்டை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல்பாட்டினை வைத்து கணிக்கலாம்” என டி.ஆர்.பி.ராஜாவையும், “திருவாரூர் நகரத்தை இரண்டு நாட்களாக திருவிழாக் கோலமாக மாற்றி வைத்திருக்கும் ஆற்றல்மிகு செயலாளர் பூண்டி கலைவாணன்” என்று பூண்டி கலைவாணனையும் சரிசமமாகப் பாராட்டினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் திமுக நிர்வாகிகள் சிலர், ராஜாவுக்கும் கலைவாணனுக்கும் அதிகாரப் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால், ராஜா அமைச்சரான பிறகு அந்தப் போக்கு மாறிவிட்டது. இப்போது, தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதி சம்பந்தப்பட்ட விஷயங்களை ராஜா கண்டும் காணாது ஒதுங்கிவிடுகிறார். அதேபோல், மன்னார்குடி தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால், “அமைச்சரைப் பாருங்கள்” என கலைவாணனும் நாசூக்காக ஒதுங்கிவிடுகிறார். இது இப்படியே தொடர்ந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்றார்கள்.