’எதற்கும் துணிந்தவன்’ படம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ள கருத்து பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த விஜய் சேதுபதி படம் என்ற சாதனையை படைக்கும் என தெரிகிறது. இப்படம் வெளியீட்டிற்குப் பின் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் குறித்து பேசியிருப்பது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.
அப்பேட்டியில் பாண்டிராஜ், ”சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப் படம் கொடுத்துவிட்டு, மற்ற நாயகர்கள் அனைவருக்கும் ஹிட் கொடுக்கிறீர்கள் என்கிறார்கள். கரோனா காலத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தான் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்படத்துக்கு தான் அதிகமாக உழைத்தேன், மக்களிடையே வரவேற்பு பெறாதது நம் கையில் இல்லை. தம்பிக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரிய ஹிட் கொடுத்தோம். அண்ணனுக்கு அதைவிட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று தான் வேலை பார்த்தோம். ஏதோ ஒரு விதத்தில் அமையவில்லை. அதற்கு காரணம் நான் தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
கரோனா காலத்தில் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் வேலை பார்த்த படம் ‘எதற்கும் துணிந்தவன்’. தயாரிப்பாளர், நாயகன் என அனைவருமே அப்படம் பொறுத்தவரை பயங்கர மகிழ்ச்சி தான். வசூல் ரீதியாக பெரிதாக பண்ணவில்லை என்பது வருத்தம். அதற்குப் பின் வெளியான படங்கள் கூட ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வசூலைத் தாண்டவில்லை என்பது தான் உண்மை. இதை யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவினை முன்வைத்து, ‘கங்குவா’ மற்றும் ‘ரெட்ரோ’ படங்களின் வசூல் குறைவா என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. மேலும், சூர்யா ரசிகர்களும் பாண்டிராஜின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.