சென்னை: சென்னையில் ரூ.2.38 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பாரா விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக நாட்டிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி, சேலம் என 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் சென்னையைத் தவிர, 5 மாவட்டங்களில் தலா ரூ.1 கோடியில் பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடியில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மைதானத்தில் திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா-இறகுப்பந்து ஆடுகளம், உட்கார்ந்து விளையாடும் பாரா-கையுந்து பந்து ஆடுகளம், பாரா-டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா-போச்சியா ஆடுகளம், பாரா-டேக்வாண்டோ ஆடுகளம், பாரா-ஜூடோ ஆடுகளம், பாரா-கோல்பால் ஆடுகளம், பாரா-பளுதூக்குதல் களம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
இத்துடன், நிர்வாக அலுவலகக் கட்டிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்குமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரா-இறகுப்பந்து மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.