செயின்ட் கீட்ஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை முழுமையாக 5-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
செயின்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கடைசி டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷிம்ரன் ஹெட்மயர் 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ஷெர்பேன் ரூதர்போர்டு 35, ஜேசன் ஹோல்டர் 20, மேத்யூ போர்டு 15 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பென் டுவார்ஷுயிஸ் 3, நேதன் எலிஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
171 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் ஓவன் 17 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசினார். கேமரூன் கிரீன் 32, டிம் டேவிட் 30, ஆரோன் ஹார்டி 28, மிட்செல் மார்ஷ் 14 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் அகீல் ஹோசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. ஒட்டுமொத்தமாக கரீபியன் தீவுகள் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய அணி 8-0 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் 3-0 என வென்றிருந்தது.