புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்துக்குள் வர வேண்டும் என நாடு விரும்புகிறது என காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் அனலை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி, “ஆபரேஷன் சிந்தூர் பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது வேறு பிரச்சினையாக இருந்தாலும் சரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முரண்பாடு ஏதும் இல்லை.
எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. போர் நிறுத்தத்துக்கு பொறுப்பு பிரதமர் மோடிதான். எனவே, அவர் இது குறித்து நாடாளுமன்றத்துக்கு பதில் அளிக்க வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்காவே காரணம் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 28 முறை கூறிவிட்டார். பஹல்காமில் பலியான 26 உயிர்களுக்கு யார் பொறுப்பு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடவர் ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025 போட்டி, வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வி அறிவித்துள்ள நிலையில், இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து விளையாடக் கூடாது என பிரமோத் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
“பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி இணைந்து விளையாடுவதற்கு இது நேரமல்ல. பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை ஆதரிக்கும் மனநிலையில் நாட்டு மக்கள் இல்லை. துப்பாக்கி குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒரே நேரத்தில் இணைந்து செல்ல முடியாது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் இந்திய வரைபடத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என அரசு சொல்கிறது. அப்படியானால், இந்த கிரிக்கெட் விளையாட்டு அதன் ஒரு பகுதியா?.” என பிரமோத் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.