சென்னை: விழுப்புரம் அருகே மகப்பேறு சிகிச்சையின்போது கர்ப்பிணியை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதால் சிசு உயிரிழந்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை முறையாக தாக்கல் செய்ய பொதுசுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த கே.தேவமணி என்பவர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பிணியான எனது மகளை முருக்கேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தேன்.
அங்கு ரத்தப்போக்கு அதிகமான நிலையில், அவரை பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். இதற்காக ஆம்புலன்ஸில் எனது மகளை ஏற்றும் நேரத்தில் மனிதாபிமானமில்லாமல் ரத்த கறையை துடைத்த பிறகே செல்ல முடியும் என செவிலியர் நிர்பந்தித்தார்.
இதனால், தாமதமாகி 8 மாத குழந்தை கருவிலேயே இறந்தது. எனது மகளும், மனம் மற்றும் உடலளவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பொதுசுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.
எனினும், அறிக்கையில் திருப்தியில்லாததால் அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, ரத்த கறையை சுத்தம் செய்ய சொன்னது முத்துலட்சுமி என்னும் பணியாளர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, முத்துலட்சுமி பணிநீக்கம் செய்யப்பட்டாலும், குழந்தையை இழந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக தமிழக அரசு ரூ.5 லட்சத்தை 4 வாரத்துக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
கிராம அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரம் பணியில் இருக்கும் வகையில் அதிகளவில் மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் அதிகளவு ஆம்புலன்ஸ் சேவையை அரசு விரிவுபடுத்த வேண்டும்.
விசாரணை அறிக்கையை முறையாக தாக்கல் செய்ய பொதுசுகாதாரத் துறை இயக்குநருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். ஏழைகள், பெண்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும் வகையில் பொதுசுகாதார இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, போதிய மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.