பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், “தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. பிரதமர் மீது எனக்கு அர்ப்பணிப்பும் அன்பும் உள்ளது என்பதை நான் பலமுறை மீண்டும் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையிலேயே பிஹாரில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நிச்சயம் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நான்கு முறை இதற்கு முன்பு நடந்துள்ளது. இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. முன்னதாக, ஒருவர் நேரடியாக ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டியிருக்கும், இப்போது அதனை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கலாம். ஆதார் அட்டைகளில் பிறந்த இடம் தெளிவு இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த விஷயத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மக்கள் மூன்று நிலைகளில் மேல்முறையீடு செய்யலாம்.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறார்கள் எனத் தெரியவில்லை. பெயர்கள் தவறாக நீக்கப்பட்டிருப்பதை காட்ட அவர்கள் ஏதேனும் ஆதாரம் கொடுக்கிறார்களா? தவறாகப் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் மட்டுமே நீக்கப்படும். ஆனால், அதேநேரத்தில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். வெளிநாடுகளில் இருந்து ஊடுருவும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இந்த திருத்தம் அவசியம். வரும் மாதங்களில், தேர்தல்கள் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்திலும் இது செயல்படுத்தப்படும்” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு, பிஹாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், நிதிஷ் குமார் அரசு குற்றவாளிகள் முன் சரணடைந்து விட்டதாகவும், இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டியதற்கு வருத்தப்படுவதாகவும் சிராக் பாஸ்வான் தெரிவித்தது பெரும் சலசலப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.