மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் குண்டம் திருவிழா இவ்வாண்டு கடந்த 22-ம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் தினமும் நடத்தப்பட்டு வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
முன்னதாக இன்று அதிகாலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் கரகங்கள் அழைத்து வரப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மூல ஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் கோயில் குண்டம் முன்பு சக்தி வேலுக்கு பால் அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தலைமை பூசாரி முதலாவதாக குண்டம் இறங்கினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.