புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. தோல்வியை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த சூழலில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. கேள்வி நேரத்துக்கு பிறகு, பகல் 12 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கப்படும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி குறித்தும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால், அடுத்தடுத்து 3 முறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் விவாதத்துக்கு பிறகு இதர விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது” என்று உறுதி அளித்தார். இதை ஏற்று எதிர்க்கட்சியினர் அமைதி காத்தனர்.
இதன்பிறகு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தை தொடங்கினார். அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 22 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய எல்லை பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.
வெளிநாட்டு (அமெரிக்க) அழுத்தம் காரணமாக போர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்திய ராணுவ டிஜிஎம்ஓ-வை பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டு போரை நிறுத்த கோரினார். இதன்பிறகு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது.
நாட்டின் நலன் மீது எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், எத்தனை பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் எத்தனை இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்புகின்றன. தேர்வு எழுதும்போது எத்தனை பென்சில், பேனா உடைந்தன என்பது முக்கியம் அல்ல. தேர்வில் வெற்றி பெறுவது தான் முக்கியம். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவ தரப்பில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ்எம்.பி.கவுரவ் கோகோய் பேசியதாவது: இந்த விவாதத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்த உண்மையையும் கூறவில்லை. பஹல்காம் தாக்குதலை நடத்திய 5 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினர், 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது என்ன நடந்தது என்பன குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லை.
போரில் பாகிஸ்தானின் பின்னால் சீனா இருந்ததாக இந்திய ராணுவம் சமீபத்தில் குற்றம் சாட்டியது. ஆனால் சீனா பற்றி எதுவுமே கூறாமல் மத்திய அரசு மவுனம் காக்கிறது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரதமர் மோடியும் பதில் அளிக்க வேண்டும். “இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 26 முறை கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, “ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் எந்த வகையிலும் பேசவில்லை. அப்படி இருக்கும்போது அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்தார் என்று எப்படி கூற முடியும்” என்று கேள்வி எழுப்பினார். இந்த விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது.
பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான விவாதத்தில் ராம்சங்கர் ராஜ்பர் (சமாஜ்வாதி), லல்லன் சிங் (ஐஜத), கல்யாண் பானர்ஜி (திரிணமூல்), அரவிந்த் கண்பத் சாவந்த் (சிவசேனா – உத்தவ் அணி), பைஜெயந்த் பாண்டா (பாஜக), தீபேந்தர் ஹூடா (காங்கிரஸ்) உட்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பேசினர்.
பேச மறுத்த சசிதரூர்: இதற்கிடையே, காங்கிரஸ் அணிக்கு சசி தரூர் தலைமையேற்று பேச வேண்டும் என்று கட்சி தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால், இதை அவர் மறுத்துவிட்டார்.
“ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக மட்டுமே பேசுவேன். எதிராக பேச மாட்டேன்” என்று சசி தரூர் திட்டவட்டமாக கூறியதால் விவாதத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் இன்று மவுனவிரதம்” என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. இன்று மதியம் மத்திய அமைச்சர் அமித் ஷா விவாதத்தில் பங்கேற்கிறார். இன்று இரவு பிரதமர் மோடி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் இன்று தொடங்க உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்று பேச உள்ளனர்.