ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷாவும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் உள்ள ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். காலை 11 மணியளவில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜபர்வான், மகாதேவ் முகடுகளுக்கு இடையே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இதற்கு ‘ஆபரேஷன் மகாதேவ்’ என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இவர்கள் சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்சா ஆஃப்கானி என அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், சுலைமான் ஷா, பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் பாதுகாப்பு படையினர் இதுவரை அதனை உறுதிப்படுத்தவில்லை.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் ஐ.ஜி. விதி குமார் பர்டி கூறுகையில், “இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி இன்னும் முடிவடையவில்லை. அதற்கு சிறிது நேரம் ஆகும்” என்றார். இந்நிலையில் அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்வதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.