சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகிய இருவரும் ‘கடவுளின் பெயரால்’ என்று கூறி, தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. முன்னதாக இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும், அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை, திருப்போரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகிய 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 6 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இதில், திமுகவை சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் மாநிலங்களவையில் கடந்த 25-ம் தேதி எம்.பி.க்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, ம.தனபால் ஆகிய இருவரும் மாநிலங்களவையில் நேற்று காலை 11 மணி அளவில் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் முன்னிலையில், “கடவுளின் பெயரால்” என்று கூறி, தமிழில் பதவியேற்றனர்.
அதிமுக சார்பில் ஏற்கெனவே மாநிலங்களவை எம். பி.க்களாக தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் உள்ளனர். தற்போது 2 பேர் இணைந்ததால் அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.