லண்டன்: தனது தலையீடு இல்லையென்றால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
தற்போது பிரிட்டன் சென்றுள்ள டொனல்டு ட்ரம்ப், அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார்மரை ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரியில் சந்தித்தார். அந்த சந்திப்புக்கு முன்னதாக உலக நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து ட்ரம்ப் பேசினார்.
“நான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் ஆறு பிரதான போர் நம்மை சுற்றி தொடர்ந்திருக்கும். இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலும் அடங்கும். நேற்று நாங்கள் வணிகம் மேற்கொள்ளும் இரண்டு நாடுகளுடன் என்ன செய்தோம் என்பதை பார்த்து இருப்பீர்கள். (கம்போடியா மற்றும் தாய்லாந்து போரை குறிப்பிட்டு இதை ட்ரம்ப் தெரிவித்தார்).
இதில் பெரிய மோதல் என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலானதுதான். ஏனெனில், அந்த இரு நாடுகளும் அணுசக்தி பலம் படைத்தவை. நான் அந்த நாடுகளின் தலைவர்களை அறிவேன். அதனால் அவர்களிடம் போரை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகத்தை தொடர முடியாது என தெரிவித்தேன். அணு கதிர்வீச்சு மற்ற நாடுகளுக்கு பரவுவதை நான் விரும்பவில்லை என்று கூறினேன்.
போரை நிறுத்துவதில் நாங்கள் கொஞ்சம் சுயநலமாக செயல்பட வேண்டி உள்ளது. இப்படி பல போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த 50 நாட்கள் கெடு என்பதை இன்னும் குறைந்த காலகட்டத்தில் கொடுத்திருக்க வேண்டும். புதின் செயல்பாடு என்னை அதிருப்தி கொள்ள செய்துள்ளது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்: காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. அதன் பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.