தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது.
கோமதி அம்மள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர், காலை 4.41 மணிக்கு அம்மன் சந்நிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு, முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, கோயில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் கோமதி அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் 9-ம் நாளான ஆகஸ்ட் 5-ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் திருநாளான ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து மதியம் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளி தவமிருக்கும் வைபவம் நடைபெறுகிறது. அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக சிவபெருமான் ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
அன்று இரவு 11.30 மணி அளவில் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
கனரக வாகனங்களுக்கு மாற்று பாதை:
ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் வழியாக செல்வதற்கு அனுமதி இல்லை. கோவில்பட்டி, கழுகுமலை வழியாக தென்காசி செல்லும் கனரக வாகனங்கள் குருவிகுளம், திருவேங்கடம், பருவக்குடி விலக்கு, தென்மலை, சிவகிரி வழியாக செல்ல வேண்டும். திருவேங்கடம் வழியாக தென்காசி செல்லும் கனரக வாகனங்கள் பருவக்குடி விலக்கு, தென்மலை, சிவகிரி வழியாக செல்ல வேண்டும்.
திருநெல்வேலி வழியாக ராஜபாளையம் செல்லும் கனரக வாகனங்கள் சண்முக நல்லூர் விலக்கு, சின்ன கோவிலான் குளம், நடுவக்குறிச்சி, வீரசிகாமணி, வாசுதேவநல்லூர் வழியாக செல்ல வேண்டும். தென்காசி வழியாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் கடையநல்லூர், புளியங்கடி, வாசுதேவ நல்லூர், சிவகிரி வழியாக செல்ல வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.