மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி கடைசி நேர நாடகங்கள் முடிந்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதங்களுடன் டிராவில் முடிந்தது. ஆனால் இந்தியாவுக்கு தார்மிக வெற்றிதான் இது என்ற அளவுக்கு இந்தப் போட்டியைத் தங்கள் கடைசி நேர அசிங்கமான நடத்தை மூலம் பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து அணியும் மாற்றிவிட்டனர்.
15 ஓவர்கள் இருக்கின்றன. ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்பது பரஸ்பர ஒப்புதலுடன் நடைபெற வேண்டிய ஒன்று, களத்தில் நிற்கும் எதிரணி வீரர்கள் அதாவது பேட்டர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது ஷுப்மன் கில், பென்ஸ்டோக்ஸ் இடையே புரிந்துணர்வு இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஜடேஜாவிடம் கைகொடுத்து முடித்துக் கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் தன்னிச்சையாக முடித்துக் கொள்ள இது என்ன அவர் வீட்டு நிகழ்ச்சியா?
கடந்த போட்டியில் ஷுப்மன் கில், ஜடேஜா, சிராஜ் மற்றும் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் அந்தரங்கமாகத் தாக்குதல் வசை புரிந்தவர்கள் தான் இந்த பென் ஸ்டோக்ஸ் அணி. அதுவும் விராட் கோலி போன்ற வலுவான மனநிலை கொண்டவர்களிடம் இவர்களது பாச்சா பலிக்காது. கில், ஜடேஜா, சிராஜ் போன்றோரிடம் தான் இவர்களது வாய் வீச்சு எடுபடும். அதைத்தான் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து செய்தது.
அதற்குப் பதிலடி இந்த டிரா தான். அதோடு மட்டுமல்லாமல் பென் ஸ்டோக்ஸ் தன் இஷ்டத்துக்கு முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னவுடன் ஓகே சொல்வதற்கோ, இல்லை அவர் ஆடலாம் என்று சொன்னால் உடனே ஆடுவோம் என்று சொல்வதற்கோ அவரது அதிகார நிலை என்ன?
கவாஸ்கர் சோனி தொலைக்காட்சியில் ஆட்டம் முடிந்தவுடன் நல்ல குட்டு வைத்த கருத்து இதுதான்: “600 ரன்களுக்கும் மேல் இந்திய அணி வெற்றி இலக்காக 2-வது டெஸ்ட்டில் நிர்ணயித்த போது இங்கிலாந்தின் யாரோ ஒரு வீரர் 600 எல்லாம் நாங்கள் எடுக்கக் கூடியது என்று பயந்துதான் இந்தியா அவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளனர். எங்கள் ஆட்டம் அப்படி என்று பெருமை பேசி 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்களே? இந்த டெஸ்ட்டில் 311 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு ஏன் வெற்றி பெற முடியவில்லை.
ஏன் 600-க்கும் மேல் ரன்களைக் குவித்து முழுதும் ஆட வேண்டும்? பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனவுடன் டிக்ளேர் செய்து பவுலர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? ஆகவே இங்கிலாந்தை இதோடு விட்டிருக்கக் கூடாது. இன்னும் 15 ஓவர்களை முழுதும் வீசி விட்டுச் செல்லுங்கள் என்றுதான் நானாக இருந்தால் கண்டிப்பாகக் கூறியிருப்பேன்.” என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.
ஸ்டோக்ஸ் நினைத்தால் ஆட்டம் முடிய வேண்டும், அவர் நினைத்தால் தொடரப்பட வேண்டும் என்பது என்ன மனநிலை? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சதம் என்னும் சொந்த மைல்கல்லை எட்ட தகுதியானவர்களே என்று ஸ்டோக்ஸ் நினைக்கவில்லை, தங்கள் பவுலர்களின் உடல்தகுதியைக் காக்க வேண்டும் என்கிறார். ஆனால் உண்மையான எண்ணம் ஜடேஜா, வாஷி சதம் எடுத்து விடக் கூடாது என்பதுதான்.
1982-ல் கபில் செய்த சம்பவம்: 1982-ல் மே.இதீவுகள் தொடரில் 2-வது டெஸ்ட்டில் கபில்தேவ் ஒரு அசாத்தியமான சதம் எடுத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அப்போது அவர் 82 ரன்களில் இருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று களத்தில் ரிச்சர்ட்சோ, கிளைவ் லாய்டோ கேட்க கபில் தேவ் இல்லை, முழு ஓவர்களையும் வீசுங்கள் என்று கூறிவிட்டார், ஆத்திரத்தில் மே.இ.தீவுகள் வீச்சாளர்கள் வீசிய குண்டுகளை கபில் எதிர்கொண்டு சதமெடுத்து விட்டுத்தான் வந்தார்.
ஒரு ஆட்டம் அதன் முழு நிறைவு ஓவர்களை வீசி முடிக்கும் வரை முடிந்ததாக கருதப்படக் கூடாது என்பதே விதிமுறை. இரு கேப்டன்கள் ஒப்புக் கொண்டால் முடித்துக் கொள்ளலாம், ஒருவர் மட்டும் முடித்துக் கொள்ளலாம் என்றும் அணி வீரர்கள் அனைவரையும் களத்தில் நிற்கும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரிடம் பேச வைப்பதும் எந்த வித இங்கிலாந்து வர்ணிக்கும் ‘ஜெண்டில்மேன்’ கேம் என்பதற்கு அர்த்தம் கொடுப்பதாக இல்லை.
அவ்வளவு நேரம் நின்று இங்கிலாந்து பவுலிங் என்ற பெயரில் எறிந்த கற்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருந்த ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இன்னும் 10 ரன்கள் எடுத்து சதமெடுத்தால் என்ன கெட்டு விடப்போகிறது என்ற எண்ணம் பென் ஸ்டோக்சுக்கு இல்லை. மாறாக தன் எண்ணத்தை மற்றோர் மீது திணிக்கும் போக்குதான் பென்ஸ்டோக்சிடம் வெளிப்பட்டுள்ளது. அவர்கள் சதம் எடுக்கக் கூடாது என்ற பென்ஸ்டோக்ஸ் படையினரின் ரகசிய கெட்ட ஆசை, ஏதோ பென் ஸ்டோக்ஸ் பெருந்தன்மையாக ஆட்டம் டிரா என்று ஒப்புக் கொண்டதாக ஏதோ ஒழுக்கம் சார்ந்த அறம் சார்ந்த விஷயமாக இங்கிலாந்தில் பார்க்கப்படுவதுதான் வேதனை.