காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர்கள் வீட்டுக்கு சென்று, நெசவாளர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார்.
மேலும், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள நெசவாளர் ஒரு வீட்டிற்கு சென்ற அன்புமணி, நெசவாளர்களிடம் நெசவு செய்வது எப்படி என்பது கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவரும் சோதனை முறையில் நெசவு செய்தார். பின்னர், நெசவாளர்கள், அன்புமணியிடம் கலந்துரையாடினர். குறிப்பாக, மழைக் காலங்களில் நெசவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம்.
கூட்டுறவு சங்கங்களில் இருந்து முறையாக எங்களுக்கு, ’ பாவு’ கொடுப்பதில்லை என தெரிவித்தனர். இதனால், முன்பு போல் நெசவுத்தொழில் வருமானம் இருப்பதில்லை என தெரிவித்தனர். மேலும், கூட்டுறவு சங்கங்களிலிருந்து போனஸ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதேபோல் பெரும்புதூர் பகுதியில் அன்புமணி நடை பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.