மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்கள் பெற்று வருவது தணிக்கையில் தெரிய வந்துள்ளது மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்படி 21 முதல் 65வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனிடையே, தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தணிக்கை செய்யப்பட்டது. இதில், 14,298 ஆண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டது.
அப்போது, ஆண்கள், பெண்களின் பெயரில் விண்ணப்பம் செய்து இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறும்போது, “மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏழை பெண்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் பயன்பெறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு உதவித் தொகையை பெற்றவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்கப்படும். இதற்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மேலும் தகுதியில்லாத 26.34 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 7.97 லட்சம் பெண்கள் 3-வதாக பதிவு செய்து பயனடைந்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல, விதிகளை மீறி உச்சவரம்பான 65 வயதுக்கு மேற்பட்ட 2.87 லட்சம் பெண்கள் நிதியுதவி பெற்று வருகின்றனர். இதனால் ரூ.431.7 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மேலும் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 1.62 லட்சம் பெண்கள் நிதியுதவி பெற்று வருவது தெரியவந்துள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதால் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.