மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் கடைசி செஷனில் ஆட்டத்தில் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என சொல்லி இந்திய வீரர்களுடன் பரஸ்பரம் ஹேண்ட் ஷேக் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் மறுத்துவிட்டனர்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நெருக்கடியுடன் எதிர்கொண்டது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
மறுபக்கம் ஃபார்மில் உள்ள ரிஷப் பந்த், காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்வாரா என்பதும் சந்தேகமாக இருந்தது. அதனால் அழுத்தம் மிகுந்த அந்த தருணத்தில், மாரத்தான் கூட்டணியை அமைத்தனர் கேப்டன் ஷுப்மன் கில்லும், கே.எல்.ராகுலும். இருவரும் 188 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ராகுல் 90 ரன்கள் எடுத்தும், கில் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 5-வது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் தரமான கூட்டணி அமைத்தனர். இருவரும் 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
கடைசி செஷனில் 15 ஓவர்கள் எஞ்சியிருந்தது. ஜடேஜா 90 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 84 ரன்களிலும் தங்களது சதத்தை நெருங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களிடம் பென் ஸ்டோக்ஸ் பேசினார். ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என ஹேண்ட் ஷேக் கொடுக்க முன்வந்தார். ஆனால், அதை இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு விதி 12.7.6 பிரிவின் கீழ் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில் ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையென்றால் இரு அணி கேப்டன்களும் பேசி ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’. இதை கடைசி ஒரு மணி நேர ஆட்டம் தொடங்கும்போதோ அல்லது கடைசி 15 ஓவர்கள் வீசப்படும் போதோ செய்யலாம். இதற்கு பரஸ்பரம் இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். பேட்டிங் செய்யும் அணியின் தரப்பில் களத்தில் உள்ள வீரர்கள் அந்த முடிவை எடுக்கலாம்.
இந்தியா ஆட்டத்தை முடித்துக்கொள்ள மறுத்த நிலையில், ஜடேஜா உடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பேசி இருந்தனர். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
“நீங்கள் சதம் விளாச வேண்டுமென்றால் இதுபோல முன்னதாகவே பேட் செய்திருக்க வேண்டும்’ என இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்தனர். அப்போது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இருவரும் பவுண்டரிகளில் ரன் ஸ்கோர் செய்து கொண்டிருந்தனர்.
ஸ்டோக்ஸ்: ஜட்டு… நீங்கள் ஹாரி புரூக் மற்றும் பென் டக்கெட் பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட் சதம் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?
ஜடேஜா: நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்? வாக்-ஆஃப் கொடுத்துவிட்டு சென்றுவிடவா?
ஸாக் கிராவ்லி: ‘ஜட்டு… ஹேண்ட் ஷேக் செய்து கொள்ளலாம்’
ஜடேஜா: ‘என்னால் எதுவும் செய்ய முடியாது” என அந்த உரையாடல் இருந்தது.
இதன் பின்னர் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் சதம் விளாசினர். அதன் பின்னர் ஆட்டம் டிரா ஆனது. அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸின் ஹேண்ட் ஷேக் விவகாரம் சமூக வலைதளத்தில் விவாத பொருளாகி உள்ளது.
ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டோக்ஸ் சொன்னது என்ன? – “இந்திய அணி மிக கடுமையாக செயல்பட்டது. ஆட்டத்தில் ஒரே ஒரு முடிவுக்கு மட்டும் தான் வாய்ப்பு இருந்தது. எனது பவுலர்களை வைத்து ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. டாவ்சன் அதிக ஓவர்கள் வீசி களைப்பில் இருந்தார். எனது முன்னணி பவுலர்களை வீச வைக்கவும் நான் விரும்பவில்லை” என ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
“If you want a hundred, you should have batted like it earlier”
“You’re going to get a Test hundred against Harry Brook & Ben Duckett” #ENGvIND | #ManchesterTest pic.twitter.com/KPLjfdUoaL