மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
அதில், “இந்திய கலாச்சாரத்தின் மிகப் பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும்தான். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம் நமது மிகப்பெரிய சொத்தாகும். இந்த ஓலைச்சுவடிகளில் விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் உள்ளன. இசை, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
பாரம்பரிய ஞானத்தை போற்றி பாதுகாப்பது நமது பொறுப்பாகும். தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த மணி.மாறன் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளை இளம்தலைமுறையினர் படித்து கற்றுக் கொள்ளவில்லை என்றால் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கருதினார். இதற்காக அவர் மாலைநேர வகுப்புகளை தொடங்கினார்.
தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்து கொள்வது என்பது குறித்து மணி.மாறன் கற்பித்தார். அவரது வழிகாட்டுதலால் ஏராளமான மாணவர்கள் ஓலைச்சுவடிகளை கற்கும் அறிவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். இப்படிப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றால் நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள் முடங்கி கிடக்காமல், புதிய தலைமுறையினரை சென்றடையும்.
இந்த சிந்தனையால் உத்வேகம் அடைந்து நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் ‘ஞான பாரத இயக்கம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. புதிய இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்படும். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்தியாவின் ஞான பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மணி. மாறன் கூறியதாவது: நான் தமிழ்ப் பண்டிதராக பணிக்கு வந்த 10 ஆண்டுகளில், தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயற்சியை அளித்துள்ளேன். தமிழகத்திலும், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் புதைந்து கிடந்த சிற்பங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வெளி உலகத்துக்கு கொண்டு வந்துள்ளேன். தற்போது ஏடகம் என்ற அமைப்பை உருவாக்கி, இலவசமாக பலருக்கு சுவடிகள் படிப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறேன்.
இதனால், வரலாறு, தொல்லியல் சார்ந்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். பொதுமக்களுக்கும் வரலாறு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை உலகம் முழுக்க அறிய செய்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்துள்ளது. இவ்வாறு மணி. மாறன் தெரிவித்துள்ளார்.