பேசல்: மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் யூரோ கோப்பையை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. கடந்த 2022-ல் நடைபெற்ற மகளிருக்கான யூரோ கோப்பை தொடரில் முதல் முறையாக யூரோ கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்ட நேரத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே கோல் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் ரூசோ 57-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
மேற்கொண்டு இரு அணியும் கோல் பதிவு செய்ய முடியாததால் 90 நிமிடங்கள் நிறைவடைந்தது. பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணியின் தரப்பிலும் கோல் பதிவு செய்யப்படவில்லை. வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று யூரோ சாம்பியன் ஆனது.