சென்னை: கொரட்டூர் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி, பால் குடம் எடுத்து, மிளகாய் தூள் சாந்து கரைசலில் குளித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களின் வேண்டுதல்கள் கைகூட, பின்னர் கோயிலாக உருபெற்று, ஓம்சக்தி நாகவல்லி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு,பால்குடம் ஏந்தியும்,
அலகு குத்திக்கொண்டும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் நாகவல்லி அம்மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்து, அப் பலன் பெற்றுச் செல்வோர் உண்டு. இக்கோயிலில் தற்போது ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடி மாத இரண்டாவது வார திருவிழாவை முன்னிட்டு சுமார் 1,500 பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், 500-க்கு மேற்பட்ட பக்தர்கள் மாலையில் தீ மிதித்தும், சிலர் மிளகாய் தூள் சாந்து கரைசலில் குளித்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, எலுமிச்சை, செவ்வாழை, ஆப்பிள், சாத்துக்குடி, தர்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்ட, நாகவல்லி அம்மனின் திருவீதி ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவில், கொரட்டூர், அம்பத்தூர், பாடி சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல், மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன், கோலவிழி அம்மன், பிராட்வே காளிகாம்பாள், பாடி படவேட்டம்மன், வில்லிவாக்கம் பாலி அம்மன், சூளை அங்காளம்மன், கீழ்பாக்கம் பாதாள பொன்னியம்மன், ஈஞ்சம்பாக்கம் கவுரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் நேற்று பக்தர்கள் கூழ் வார்த்தும், பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனர்.