ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் கடந்த 2008 ஆகஸ்ட் 31-ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கில் மெயின்புரி காவல் துறையினர், 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் மெயின்புரியின் நாக்லாபந்த் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த ஓம்பிரகாஷ் என்பவர் ஒரு முக்கியமான தவறை செய்துவிட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்வீர் சிங் யாதவுக்கு பதிலாக அவரின் மூத்த சகோதரரான ராஜ்வீர் சிங் யாதவ் பெயரை சேர்த்துவிட்டார்.
இதையடுத்து டிசம்பர் 1-ம் தேதி ராஜ்வீர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் போலீஸார் இந்த பெயர் மாற்ற தவறை ஒப்புக்கொண்டாலும் பல்வேறு சிக்கல்களால் இந்த வழக்கு முடிவடைய 17 ஆண்டுகள் வரை நீடித்தது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மெயின்புரி நீதிமன்றம் ராஜ்வீர் சிங் யாதவை நிரபாராதி என்று அறிவித்து இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தது. பணியின்போது மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
17 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் தனது 55 வயதில் ராஜ்வீர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இந்த காலகட்டத்தில் தனது வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி, மன நிம்மதி அனைத்தும் நாசமாகி போனதாக ராஜ்வீர் கண்ணீருடன் வேதனை தெரிவித்தார்.