சென்னை: ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தொலைவு இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால், கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன. இந்நிலையில், 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில், ரயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அத்தகைய நிலையங்கள் தவிர, கழிப்பறையை சுத்தம் செய்ய வேறு புதிய இடங்களையும் பரிந்துரைக்கலாம். இதுகுறித்து ரயில்வே தலைமை இயந்திரவியல் பொறியாளர் முடிவு எடுக்க வேண்டும். அதுபோல, ஒவ்வொரு ரயிலுக்கும் அடையாளம் காணப்பட்ட ரயில் நிலைய இடங்களின் விவரங்களை தொகுத்து, ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்போது, ரயில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில், ‘சுத்தமான ரயில் நிலையம்’ திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த 2003-ல் அறிமுகம் செய்தது. படிப்படியாக, பல ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. கழிப்பறையை முழுமையாக சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளிப்பது, குப்பையை அகற்றுவது உட்பட இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு செயல்முறைகள் இதில் அடங்கும்.