புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் விண்வெளி வீரர் ஷுபான்ஷு ஷுக்லா பற்றிய பாடங்களை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, விண்வெளி வீரர் ஷுபன்ஷு ஷுக்லா, சந்திரயான் விண்கலம் மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் குறித்த தகவல்களை பள்ளி பாடத் திட்டத் தில் சேர்க்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடுதலாக இடம்பெறும் என்றும் வரும் கல்வியாண்டில் இது அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பிலும் 8 முதல் 10 பக்கங்கள் அடங்கிய பாடங்களை தயாரிக்குமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பாடங்கள் 2 வகைகளாக தயாரிக்கப்பட உள்ளது. இதில் ஒன்று 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடதிட்டத்திலும் மற்றொன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்திலும் சேர்க்கப்படும்.
இதனிடையே, 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்சிஇஆர்டி பாட புத்தகங்களை கட்டாயமாக பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு சிபிஎஸ்இ கடிதம் எழுதி உள்ளது. மேலும் என்சிஇஆர்டி அல்லது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்டிஇஆர்டி) பாடப் புத்தகங்களை பின்பற்றுமாறு கடுமையாக அறிவுறுத்தி உள்ளது. இது தவிர, பள்ளிகள் தங்கள் தேவைக்கேற்ப துணை பாடப் புத்தகங்களை பயன்படுத்தலாம் என்றும் அதேநேரம் அது தேசிய பாடத் திட்ட கட்டமைப்புடன் ஒத்துப் போக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில், என்சிஇஆர்டி அல்லது எஸ்சிஇஆர்டி புத்தகங்கள் கிடைக்காத பாடங்களுக்கு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள சிபிஎஸ்இ புத்தகங்களை பின்பற்ற வேண்டும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.