மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.
இந்நிலையில், இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? பஹல்கம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அண்மையில் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணி உடன் விளையாட மறுத்தது போன்றவற்றை முன்வைத்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இரு நாடுகளும் பொதுவான இடத்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் என்ற ஒப்பந்தம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“இந்திய வீரர்கள் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியைப் புறக்கணித்தனர். அதைத் தேசியக் கடமை என்று வர்ணித்தனர். இப்போது பாகிஸ்தானுடன் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டியில் ஆடுவது நன்றாக உள்ளதா? உங்களுக்கு தேவையென்றால் தேசப்பற்று என்று சொல்வது. முதலில் இந்த போக்கை நிறுத்துங்கள். விளையாட்டு விளையாட்டாகவே இருக்கட்டும்; பிரச்சாரமாக வேண்டாம்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து கங்குலி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
கங்குலி கருத்து: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெறுவதுதான் சரி என நினைக்கிறேன். ஆட்டம் விளையாடப்பட வேண்டும். அதேநேரத்தில் பஹல்காம் மாதிரியான தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற கூடாது. தீவிரவாதம் கூடாது. அது நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால், அது கடந்த காலம்” என கங்குலி கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த 2012-13ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தன. அதன் பின்னர் இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.