சென்னை: தமிழகத்தில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம். இந்த பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் சரியான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சாலைகள், தெருக்களில் செல்லவே அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, தெரு நாய் கடியால் குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெரு நாய்களால், சாலை விபத்துகளும் ஏற்படுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் லட்சக்கணக்கான மக்கள் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்கள் கடிக்கும்போது, அந்த தொற்று மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.