சென்னை: “உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவத் துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப் பெரிய அளவிலான சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
அந்த வகையில் வரும் 2-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம், மக்களை மிக பெரிய அளவில் கவரும். முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் இது. இதில் தனியாரில் 15 முதல் 20 ஆயிரம் வரை செலவாகும், அரசு மருத்துவமனையில் 4 ஆயிரம் வரை ஆகும். ஆண், பெண் என இரு பாலருக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களை கண்டறியும் பணிகளும் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது” என்றார்.
பின்னர், தனியார் மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை பெறுவது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளது குறித்து கேட்டதற்கு, “ஆளுநர் தமிழிசை இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். தமிழிசைக்கு அரசு மருத்துவமனை எப்படி செயல்படும் என்று தெரியும். சமீபத்தில், பாதுகாப்பு துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். பிரதமர் சகோதரர் கூட தனியார் மருத்துவமனையில் தமிழகத்தில் சிகிச்சை பெற்றார் .
உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அரசு மருத்துவமனைகளின் தரம் மிக சிறப்பாக இருக்கிறது. அரசு மருத்துவ சேவை, தனியார் மருத்துவ சேவை என பிரித்து பார்க்க கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என்றார்.
தமிழிசை கூறியது என்ன? – முன்னதாக, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் முதல்வர் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம். கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை, கோடியில் வாடிக் கொண்டிருக்கும் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம். புதுச்சேரியில் தடுப்பூசி போடப்பட்டபோது கூட, அதை அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் நான் போட்டுக் கொண்டேன். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை என்றுதான் எனது ஆதங்கம்.
ஏழையின் இதயத்துக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசு மருத்துவமனையில் கிடைக்கவில்லை. அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அப்போலோ தரத்துக்கு அரசு மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தான் நான் வெளிப்படுத்துகிறேன். தவிர இதில் அரசியல் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.