‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் ‘தலைவன் தலைவி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்கு வசூல் 2-வது நாளில் கிடைத்திருக்கிறது. மேலும், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த வரவேற்பால் பாண்டிராஜ் பெரும் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக பாண்டிராஜ் கூறும்போது, “3 ஆண்டுகளுக்குப் பிறகு எனது படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப எமோஷனலாக இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும். ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள். ’தலைவன் தலைவி’ படத்தை அவர்களுடைய கதையாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களே இப்படத்தை பாருங்கள் என்று விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
’கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்குப் பின் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தொலைபேசி வாயிலாக பாராட்டும் போது சந்தோஷமாக இருக்கிறது. 2 மணி நேரம் ஜாலியாக சிரிக்கவும், 20 நிமிட எமோஷனாலாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் பாண்டிராஜ்.
தமிழில் பெரும் வெற்றி பெற்றிருப்பதால், தெலுங்கில் ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.