‘மதராஸி’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5-ம் தேதி ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகிறார். இதனை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
’மதராஸி’ படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது, “‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்ஷன் காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பினேன். இப்போது ’மதராஸி’ காட்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘கஜினி’ மற்றும் ‘துப்பாக்கி’ ஆகிய படங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஏ.ஆர்.முருகதாஸை மீண்டும் வெற்றி பாதையில் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.