திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால் தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ளதைப்போல திருச்சியில் பயணிகள் மற்றும் வணிக ரீதியிலான ஓய்வு அறைகள் இல்லை. எனவே, புறப்பாடு பகுதியில், சர்வதேச விமான நிலையத்தில் உள்ளதைப்போல உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தியா விமான நிலைய ஆணைய குழுமம் உத்தரவின்படி, திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் 3-வது மாடியில் பயணிகளுக்கான ஓய்வறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்த பெங்களூரு ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், வெளிநாடு மற்றும் உள்நாடு செல்லும் பகுதிகளில் எக்ஸிகியூடிவ் மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கான ஓய்வறைகளை அமைத்துள்ளது.
பல லட்ச ரூபாய் செலவில் ஸ்டார் ஓட்டல் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறைகளில், திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மையப்படுத்தி, உள் அலங்காரம் மற்றும் ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தி ல் 200 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் இருக்கைகள், நாற்காலிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறைகள், வணிக மற்றும் விஐபிக்கள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.