நகரில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது பல குடும்பங்களின் கனவு. ஆனால் அரசு கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் பராமரிப் பின்றி, வேதனையில் தவிக்கிறார்கள் திருப்பூர் வீரபாண்டி பழவஞ்சிபாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்!
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறும்போது, ”திருப்பூர் மாநகரில் ஆலாங்காடு, கருவம்பாளையம் பகுதிகளில் இருந்து ‘சொந்த வீட்டு’ கனவுடன், இங்கு வந்து குடியேறினோம். இன்றைக்கு 3 ஆண்டுகளை கடந்தும், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு பிளாக்கில் 32 வீடுகள் வீதம் மொத்தமுள்ள 40 பிளாக்குக்கும் சேர்த்து, 1280 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.
முறையற்ற குடிநீர் விநியோகம், கழிவுநீர் குழாய்கள் அடைத்துக் கொள்வதால் வீடுகளுக்கு செல்லும் வழியிலேயே வெளியேறும் மனிதக் கழிவுகள், மழைக் காலங்களில் நாற்றத்துடன் வாழ வேண்டிய அவலம், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்க ளுக்கும் பேருந்து வசதி இல்லாமல் இருப்பது என பல்வேறு சிரமங்களை நாள்தோறும் சந்திக்கிறோம். குடிசை வீட்டில் இருந்த போது கூட, மிகவும் நிம்மதியாக இருந்தோம். ஆனால் பணம் கட்டி அரசு வீட்டை பெற்று, நிம்மதியை இழந்தது தான் மிச்சம்,” என்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் கூறும்போது, “கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். ஆனால் அது இயங்கு வதில்லை. இதனால் சாக்கடை கழிவு தொடங்கி மனிதக்கழிவு வரை அப்படியே பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து முன்பு அதிகாலை 5 மணிக்குபேருந்து இயக்கப்பட்டது. தற்போது 5.30 மணிக்கு தான் வருகிறது. இந்த பேருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்டு திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் செல்லும்போது, மணி 7 ஆகிவிடுகிறது.
இதனால் காலை 6.30 மணிக்கு பணியில் இருக்க வேண்டிய துப்புரவுத் தொழிலாளர்கள், நாள்தோறும் பணம் கொடுத்து ஆட்டோவில் செல் கின்றனர். முன்பு போல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மருத்துவமனை இல்லை. பகல் நேரங்களில் அவசரத்துக்கு ஆட்டோ பிடித்தால் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் செல்ல ரூ.300 செலவாகிறது. உரிய பேருந்துகளை சுழற்சி முறையில், பழவஞ்சிபாளையம் குடியிருப்புக்கு அனுப்பினால் தான் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.
திருப்பூர் மாநகராட்சிக்குள் எங்கள் குடியிருப்பு இருந்தாலும் ஒரு குப்பை வண்டி கூட வருவதில்லை. பொதுவெளியில் கொட்டுவதால் சுகாதாரம் நாள் தோறும் சீரழிகிறது. சுகாதார ஊழியர்கள் பலர் இங்கு குடியிருக்கின்றனர். ஆனால் சுகாதாரமற்ற முறையில் அவர்கள் இருப்பது தான், வேதனையின் உச்சம். ரேஷன் கடை திறப்பதே இல்லை. பொருட்கள் வாங்க சென்றால், பழைய கடைக்கே செல்லுங்கள் என திருப்பி அனுப்பு கின்றனர்.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு அங்கன்வாடி இல்லை. கட்டிடம் உண்டு. ஆனால் திறப்பதே இல்லை. குழந்தைகள் ஆரோக்கியமான சத்துணவு இன்றி தவிக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கன்வாடிக்கு செல்லாமல், வீட்டிலேயே முடங்கி செல்போனுக்கு அடிமையாகி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கட்டிடம் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி அதனை போர்க்கால அடிப்படையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மாவட்ட ஆட்சியர் கருணையோடு நடவடிக்கை எடுக்க எதிர்பார்க் கிறோம். நூலகம் உள்ளிட்டவை இல்லை. இனி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது, இவற்றையெல்லாம் கவனித்து தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் எங்களை போல் பல்வேறு பகுதிகளிலும், பொதுமக்கள் பாதிப்பை சந்திப்பார்கள்.
பல குழந்தைகள் இங்கிருந்து 2 பேருந்துகள் மாறி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும், கருவம்பாளையம் அரசுப் பள்ளிக்கும் செல்கின்றனர். குழந்தைகளின் நலன் கருதியாவது உடனடியாக, பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொழிலாளர்கள் வீடு திரும்பும் வழியில் போதிய தெருவிளக்குகள் அமைத்துத்தர வேண்டும்,” என்றனர்.