ஸ்ரீயின் நிலை குறித்து பேட்டியொன்றில் முழுமையாக பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீயின் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ஸ்ரீயை மீட்டு அவரைக் குணப்படுத்தி நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில் ஸ்ரீ குறித்து லோகேஷ் கனகராஜ், “இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறான். ஒரு நாள் காலையில் வீடியோ காலில் புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறினான். சரியாக திட்டமிட்டு செய்யலாமே என்றேன். இல்ல மச்சான் உடனே பண்ணனும் என்றான். சரி பண்ணு என்று கூறிவிட்டேன். இன்ஸ்டாவில் ஏதோ ரீல் போட்டதற்கு, இவர்கள் எல்லாம் ஸ்ரீயை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என என்னையும் சேர்த்து திட்டினார்கள். இதற்காக எல்லாம் தான் சமூகவலைதளத்தில் இருந்து விலகியே இருக்கிறேன்.
தினமும் காலையில் எழுந்து அனைத்து விஷயங்களுக்கும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. ஸ்ரீயை பற்றி பேச ஏன் தயங்குகிறேன் என்றால், அது இன்னொருவனுடைய வாழ்க்கை. அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. என்னதான் ஸ்ரீ என்னுடைய நண்பனாக இருந்தாலும், அவனும் நானும் கேமரா முன்பு பேச முடியாது. அவன், அவனது குடும்பம் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வெளியே சொல்ல முடியாது. ஒரு நாள் அவன் முழுமையாக குணமாகி வரும்போது அனைவரும் தன்னைப் பற்றி பேசியதை சமூகவலைதளத்தில் அவன் பார்க்க நேரிடும்.
ஸ்ரீயின் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறோம் என ஏன் வெளியே சொல்ல வேண்டும். என்னை, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை எல்லாம் திட்டினார்கள். இதற்கு இடையே நான் படப்பிடிப்பு வேறு செய்ய வேண்டும். ஸ்ரீயை வேறு பார்க்க வேண்டியதிருந்தது. அதனால் தான் சமூகவலைதளத்தில் இருந்து விலகினேன். இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறான். முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கே என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.