புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் 2,379 இந்தியர்களும், நேபாளத்தில் 1,357 இந்தியர்களும், கத்தாரில் 795 இந்தியர்களும். மலேசியாவில் 380 இந்தியர்களும், குவைத்தில் 342 இந்தியர்களும், பிரிட்டனில் 323 இந்தியர்களும், பஹ்ரைனில் 261 இந்தியர்களும், பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் உள்ளனர்.
மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண ண் டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்தியத் தூதரகங்களின் வாயிலாக செய்து வருகிறோம். இலங்கை சிறைகளில் உள்ள 27 தமிழக மீனவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் 28 பேரை மீட்பதற்கான முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.