புதுடெல்லி: உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் ஆய்வு எடுக்கப்பட்டது.
இவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்கின்றனர் என்றும் முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் மதிப்பீடு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் 8 இடங்களை பிடித்து இருக்கும் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கிறார்.
2-வது இடத்தில் தென் கொரிய அதிபர் லி ஜோ மியுங்க் உள்ளார். அவருக்கு 59 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. அர்ஜென்டினா நாட்டின் அதிபர் ஜாவிஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நம்பிக்கை பட்டியலில் 8-வது இடத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (44 மதிப்பெண்கள்) தள்ளப்பட்டுள்ளார். இந்த மாதம் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்த ஆய்வுகள் எடுக்கப்பட்டு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 4-வது இடத்தை கனடா பிரதமர் மார்க் கார்னியும்(56 மதிப்பெண்கள்), 5-வது இடத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸும்(54 மதிப்பெண்கள்) 6-வது இடத்தை மெக்ஸிகோ அதிபர் கிளெடியா ஷெய்ன்பாமும் (53 மதிப்பெண்கள்), 7-வது இடத்தை சுவிட்சர்லாந்து அதிபர் கரின் கெல்லர் சுட்டரும் (48 மதிப்பெண்கள்) பிடித்துள்ளனர்.
இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு முடிவில் அவர் மீண்டும் உலகின் நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகளவில் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற மற்றும் மிகவும் நம்பகமான தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது வலுவான தலைமையில் பாரதம் பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்று கூறியுள்ளார். இதைப் போல் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.