மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் விளாசினார்.
மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 135 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் குவித்திருந்தது. ஜோ ரூட் 150, ஆலி போப் 71. ஹாரி புரூக் 3, ஜேமி ஸ்மித் 9. கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர் பென் ஸ்டோக்ஸ் 77, லியாம் டாவ்சன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. லியாம் டாவ்சன் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரைடன் கார்ஸ், பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். பென் ஸ்டோக்ஸ் 164 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது 14-வது சதத்தை விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அவர், சதம் அடித்துள்ளார். கடைசியாக அவர், 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் 155 ரன்கள் விளாசியிருந்தார்.
அபாரமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 198 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தை லாங் ஆன் திசையில் விளாசிய போது சாய் சுதர்சனிடம் கேட்ச் ஆனது. 9-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஜோடி 97 பந்துகளில், 95 ரன்கள் சேர்த்தது. ரவீந்திர ஜடேஜா பந்துகளில் 2 சிக்ஸர்களையும், வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஒரு சிக்ஸரையும் பென் ஸ்டோக்ஸ் விளாசியிருந்தார்.
சிறிது நேரத்தில் பிரைடன் கார்ஸ் 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் ஜடேஜா பந்தில், டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் நின்ற சிராஜிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முடிவில் இங்கிலாந்து அணி 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 2 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்னரே இந்திய அணி 2 விக்கெட்களை தாரை வார்த்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
முதல் ஓவரில் கிறிஸ் வோக்ஸ் அடுத்தடுத்து கைப்பற்றி இந்த இரு விக்கெட்களும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு ஒரு ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் ஒரு ரன்னுடனும், கேப்டன் ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் நிதானமாக விளை யாடி ரன்கள் சேர்த்தனர். சீராக ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் 77 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவரது 8-வது அரை சதமாக அமைந்தது. கே.எல்.ராகுல் 141 பந்துகளில் அரை சதம் கடந்தார். இது அவரது 19-வது அரை சதம்.
4-ம் நாள் ஆட்ட முடிவில் அணி 64 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 78 ரன்களும், கே.எல்.ராகுல் 87 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 137 ரன்கள் பின்தங்கி உள்ளது.
3-வது ஆல்ரவுண்டர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்களை வீழ்த்திய ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் தென் ஆப்பிக்காவின் ஜேக் காலிஸ் (13,289 ரன்கள், 292 விக்கெட்கள்) மேற்கு இந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ் (8,032 ரன்கள், 235 விக்கெட்கள்) ஆகியோருடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ் (7,032 ரன்கள், 229 விக்கெட்கள்). மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதமும், 5 விக்கெட்களையும் வீழ்த்திய 5-வது கேப்டன் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
2-வது முறையாக 2 விக்கெட்கள்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸின் முதல் ஓவரில் 2 விக்கெட்களை பறிகொடுத்தது. இந்த நூற்றாண்டில் முதல் ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட்களை இழப்பது இது 2-வது முறையாகும். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்திருந்தது.
5-வது அதிகபட்ச ஸ்கோர்: இந்திய அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த வகையில் 1938-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 903 ரன்களையும், 1930-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 849 ரன்களையும், 2024-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 823 ரன்களையும், 2011-ல் இந்திய அணிக்கு எதிராக 710 ரன்களையும் இங்கிலாந்து அணி குவித்திருந்தது.
மான்செஸ்டரில் அதிகம்: இந்திய அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இதற்கு முன்னர் 1964-ல் ஆஸ்திரேலிய அணி 656 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
பும்ராவின் ‘முதல் 100’: இங்கிலாந்து அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 33 ஓவர்களை வீசி 112 ரன்களை வழங்கி 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, ஓர் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது இதுவே முதன்முறையாகும்.