சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
1, 2-ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ‘பசுமையும், பாரம்பரியமும்’ என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.
முதல்கட்டமாக, பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். அதை தொடர்ந்து, குறுவட்ட அளவில் (ஆக.25 முதல் 29), வட்டார அளவில் (அக். 13 முதல் 17), மாவட்ட அளவில் (அக்.27 முதல் 31), மாநில அளவில் (நவ.24 முதல் 28) போட்டிகள் நடைபெறும்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.