வார்னர் பார்க்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20-ல் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.
செயின்ட் கீட்ஸில் உள்ள வார்னர் பார்க்கில் நேற்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷாய் ஹோப் 57 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். பிரண்டன் கிங் 36 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்தார்.
215 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 23 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. டிம் டேவிட் 37 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசி மிரட்டினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை டிம் டேவிட் நிகழ்த்தினார். இதற்கு முன்னர் ஜோஷ் இங்லிஷ் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.
மிட்செல் ஓவன் 36, மிட்செல் மார்ஷ் 22, கிளென் மேக்ஸ்வெல் 20, ஜோஷ் இங்லிஷ் 15, கேமரூன் கிரீன் 11 ரன்கள் சேர்த்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 4-வது ஆட்டம் இன்று (27-ம் தேதி) நடைபெறுகிறது.