சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் விடுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவழிப்பதுடன், தங்களது சந்த பணத்தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்லது இரவு உணவு வாங்கிக்கொடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டுதேவானந்த் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மற்றம் வேலூர் மாவட்டத்தில் தற்காலிக அரசு வாகன ஓட்டுநர்களாக பணிபுரிந்த சி.சின்னதம்பி, எம். கிருஷ்ணமூர்த்தி, பி.ஆனந்தன் ஆகியோரை பணிநிரந்தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை அமல்படுத்தவில்லை எனக்கூறி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குமார் ஜெயந்த், எஸ்.கே.பிரபாகர், வி.ராஜாராமன், பி.குமாரவேல் பாண்டியன், டி.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பட்டுதேவானந்த் முன்பாக நடந்தது. அப்போது சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆஜராகி மனுதாரர்கள் 3 பேரும் கடந்தாண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, 3 ஆண்டுகள் காலதாமதத்துடன் அதுவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகு பணிநிரந்தர உத்தரவை நிறைவேற்றியுள்ளனர். இதனால் மனுதாரர்களின் பணிமூப்பு பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் போன்ற இதர பணப்பலன்களிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, மனுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பணஇழப்பை சரிசெய்யும் வகையில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் தங்களது சொந்த பணத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு கொஞ்சம் கடினமானது என்றார்.
அதையடுத்து நீதிபதி பட்டுதேவானந்த் 5 பேரும் ஏதாவது முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லம் சென்று சேவை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாமா என்றார். அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சம்மதித்து உத்தரவாத மனுக்களை தாக்கல் செய்தனர். அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், 5 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதுடன் சேவை செய்கிறோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
எனவே அவர்கள் 5 பேரும் இருவாரங்களில் தங்களது விருப்பப்படி அவர்கள் பணிபுரியும் ஊரில் உள்ள ஏதாவது ஒரு முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் விடுதியில் இருப்பவர்களுடன் தங்களது நேரத்தை செலவிட்டு, தங்களது சொந்த செலவில் ஸ்பெஷல் மதிய உணவு அல்லது இரவு உணவை வாங்கி கொடுத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
இந்த சேவை குறித்து நீதித்துறை பதிவாளரிடம் ஆதாரங்களுடன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை யாராவது இந்த உத்தர வாதத்தை நிறைவேற்ற தவறினால் அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். நீதிபதி பட்டு தேவானந்த் தற்போது ஆந்திராவுக்கு பணிமாறுதலாகி சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.