சென்னை: மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார்.
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக அண்மையில் வைகோ குற்றம்சாட்டி இருந்தார்.
தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில் விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என மல்லை சத்யா பதிலளித்திருந்தார். இந்த நிலையில், மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மல்லை சத்யா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மல்லை சத்யா ஆதரவாளர்கள் கூறியது: “மதிமுகவில் உட்கட்சி ஜனநாயக படுகொலையை பொது வெளியில் எடுத்துரைத்தோம். கட்சியில் தலைமை நிர்வாகிகள் மத்தியில் சாதி ரீதியான மனநிலை இருப்பது உண்மை. இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. 22 மாவட்டச் செயலாளர்களின் சமூக பின்புலம் மூலம் இதை அறியலாம்.
இந்தச் சூழலில் மல்லை சத்யா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பொது சமூக, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை. எங்களுக்கான ஆதரவும் பெருகி வருகிறது. இதனால் வைகோவுடன் திமுகவில் இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் விலகியபோது இருந்த நிலையை விட கட்சியில் மிகப் பெரிய சலசலப்பு நிலவி வருகிறது. இதை திசை திருப்பவே மிகப் பெரிய வேலைகளை செய்கின்றனர். குறிப்பாக, அவதூறு பரப்புவோர் மீது காவல் துறையில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளிக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பது எப்படி அவதூறு பரப்புவதாகும்.
மல்லை சத்யாவுக்கு ஆதரவாக மாமல்லபுரத்தில் கட்சிக் கொடியை வாகனத்தில் இருந்து அகற்றும் போராட்டத்தை முன்னெடுத்தோம். எங்கள் மீது கொடியை அவமதித்ததாக புகாரளித்துள்ளனர். சாதி மோதல்களை தூண்டுவதாகவும் சிலர் முன்னாள் நிர்வாகிகள் மீது புகாரளிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் யாரும் அப்படி பேசியதாகத் தெரியவில்லை.
ஓரிரு நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து மல்லை சத்யா பேசினார். இதேபோல், பல தலைவர்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் அவர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னை, சிவானந்தா சாலையில் ஆக.2-ம் தேதி உண்ணாவிரத போராட்ட தொடக்கம் மற்றும் நிறைவு நிகழ்வில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். போராட்டத்திலும் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆக.8-ம் தேதி முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரை சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, மாநிலம் தழுவிய நெடும் பயணத்தை மல்லை சத்யா முன்னெடுக்கவிருக்கிறார். மக்கள் மன்றம் முதல் நீதிமன்றம் வரை செல்ல தயாராக இருக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.