சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், திமுக ஐ.டி.பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, திமுக ஐ.டி. பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.