“உருட்டுகள், திருட்டுகள் எல்லாம் அதிமுகவுக்கே சொந்தமானவை” என்று தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கங்கைகொண்ட சோழபுரத்தில் மக்களுக்கு ஏதாவது ‘ஷோ’ காட்ட முடியுமா என்ற எண்ணத்தில்தான் பிரதமர் மோடி வந்துள்ளார். பாஜக தலைவர்கள் எத்தனை முறை வந்தாலும், எத்தனை எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. வரும் தேர்தலில் அவர்களது நிலை இன்னும் மோசமாகத்தான் போகும்.
எனக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசிச் சென்றுள்ளார். நான் எப்போதும் நாவடக்கத்துடன் தான் பேசுகிறேன். அத்துமீறி எதுவும் பேசவில்லை. அத்துமீறி பேசியது குறித்து தெரிவித்தால் அதற்கு பதில் கூற தயாராக இருக்கிறேன். திமுகவின் உருட்டுகளும், திருட்டுகளும் என்ற புதிய பிரச்சாரத்தை பழனிசாமி தொடங்கியுள்ளார். உருட்டுகள், திருட்டுகளெல்லாம் அதிமுகவுக்கே சொந்தமானவை. திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து இதுபோன்று செய்து காட்டவும் முடியும். அதையும் செய்து காட்டுவோம்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. இதை உருட்டு, திருட்டு என்று கூறுவது அநாகரிகமானது. மின் கட்டணம் கடுமையாக உயர்ந்திருப்பதாக பழனிசாமி கூறியிருக்கிறார். அவரது ஆட்சி காலத்தில் கையெழுத்திட்ட திட்டத்தால் தான் படிப்படியாக மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதேசமயம், திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள மின் கட்டணத்தை சமாளிக்கும் வகையில் மக்களிடத்தில் வருவாயையும் பெருக்கி உள்ளோம். தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது” என்றார்.