விழுப்புரம்: நடைபயணத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இசைவுடன், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் ‘அதிகார மோதலால்’ பாமக இரண்டாக உடையும் நிலை உருவாகி உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் கடந்த 20-ம் தேதி அன்புமணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த ராமதாஸ், தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபிக்கு கடிதம் எழுதினார்.
நிறுவனர் மற்றும் தலைவர் என்ற அடிப்படையில் என்னுடைய அனுமதி இல்லாமல் நடைபயணம் நடைபெற இருப்பதால் வட தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், எனவே நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டிருந்தார். முன்னதாக அவர், பாமக கொடி மற்றும் தனது உருவ படத்தை பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ராமதாஸின் எச்சரிக்கையை மீறி, அவரது பிறந்தநாளன்று, “உரிமை மீட்க, தலைமுறை காக்க” என்ற முழக்கத்துடன் திருப்போரூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது 100 நாள் நடைபயணத்தை தொடங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமக முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். பாமக கொடியுடன் தொண்டர்களும் சென்றனர்.
இந்நிலையில், நடைபயணம் செல்பவர்களை நீதிமன்றம் முன்பு நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இசைவுடன் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் இன்று (ஜுலை 26) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ராமதாஸ் இசைவு இல்லாமல் கடந்த 25-ம் தேதி முதல் நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது சட்ட விரோதமானது என்பதால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, கட்சி தலைவர்களிடையே மோதலுக்கு வழிவகுக்கும். இதனால், நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
நடைபயணத்தை தொடங்கி பொதுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றம் முன்பு (அதாவது கைது செய்து) நிறுத்த வேண்டும் என பாமக கேட்டுக் கொள்கிறது. நீதிமன்றத்துக்கு சென்று, நடவடிக்கை எடுத்து பாடம் புகட்ட வேண்டும். பிற இடங்களில் நடைபயணம் செய்தால், காவல் நிலையத்தில் பாமக சொந்தங்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.