‘தலைவன் தலைவி’ படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. ஜூலை 25-ம் தேதி வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலையில் முதல் காட்சி முடிந்தவுடனே, அடுத்தக் காட்சியில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அனைவருக்குமே இப்படத்தில் காட்சிகள், காமெடி என அனைத்துமே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. தற்போதைய சூழலில் இப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி அளவுக்கு மொத்த வசூல் செய்யும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ‘மகராஜா’ படம் அளவுக்கு இப்படத்தின் வசூல் இருக்கும் என்கிறார்கள்.
புக் மை ஷோ தளத்தில் முதல் நாளுக்கு 1.6 லட்சம் அளவுக்கு டிக்கெட் புக் ஆகியிருக்கிறது. இது விஜய் சேதுபதியின் முந்தைய படமான ‘ஏஸ்’ படத்தின் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங்கை விட அதிகம். இப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.